15 ஆண்டுகள் கடந்த அரசு பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்கவேண்டும் -அன்புமணி ராமதாஸ்


15 ஆண்டுகள் கடந்த அரசு பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்கவேண்டும் -அன்புமணி ராமதாஸ்
x

15 ஆண்டுகள் கடந்த அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 1,500 அரசு போக்குவரத்து கழக பஸ்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்தும் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மேலும் 1½ ஆண்டுகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை, தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் அக்கறை இல்லாத இந்த கோரிக்கை கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்க வேண்டும் என்பதை காரணம் காட்டி, சுற்றுச்சூழலை சீரழிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாடு அரசு கொள்கையின்படி அரசு பஸ்கள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. ஓடிய பிறகும், அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. ஓடிய பிறகும் மாற்றப்பட வேண்டும். ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரசு பஸ்களின் பயன்பாட்டு காலம் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. என்றும், அரசு விரைவு பஸ்களுக்கு 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. என்றும் நீட்டிக்கப்பட்டது. அரசு பஸ்களை அதிக அளவாக 7 ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம்?

'மீம்ஸ்'கள்

வாழ்நாள் முடிந்த பஸ்களை இயக்கும் தீமைக்கு பொதுமக்களுக்கு சேவை வழங்கவேண்டும் என்பது நியாயமான காரணமாக இருக்க முடியாது. 15 ஆண்டுகளை கடந்த வணிகப்பயன்பாடு வாகனங்களை கழிவு செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசு தயாராகியிருக்க வேண்டும். அதையும் கடந்து 2021-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு பஸ்களின் வாழ்நாள் 6 ஆண்டுகள்தான். அதன்படி பார்த்தால் இப்போது 15 ஆண்டுகளை கடந்த 1,500 பஸ்களும் 9 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டில் பஸ்களின் வாழ்நாள் காலம் நீட்டிக்கப்பட்டபோது கூட, இந்த பஸ்கள் அவற்றின் வாழ்நாளை கடந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தன. அப்போதாவது அந்த வாழ்நாள் முடிந்த பஸ்கள் கழிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறியது சுற்றுச்சூழலுக்கும், பயணிகளின் பாதுகாப்புக்கும் இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்குமே தவிர, மக்களுக்கு சேவை வழங்குவதற்காக, தகுதியற்ற பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோருவது நியாயமானதாக இருக்காது. அண்டை மாநிலங்களின் போக்குவரத்து கழக பஸ்களில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கும் அனுபவமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் என்றால், பக்கவாட்டில் வரும் வாகன ஓட்டிகளின் மீது கரும் புகையை அடித்து அவர்களை கருப்பாக்குவது, பயணத்தின்போது ஒரு சக்கரம் மட்டும் கழன்று ஓடுவது, பாலங்களின் மீது பழுதடைந்து நிற்பது போன்ற 'மீம்ஸ்'கள்தான் நினைவுக்கு வருகின்றன.

பயன்பாட்டில் இருந்து நீக்கவேண்டும்

15 ஆண்டுகளை கடந்த பஸ்களும், பிற வாகனங்களும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்யமுடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, அவை அவற்றில் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளை கடந்த அரசு பஸ்களையும், பிற அரசு துறை வாகனங்களையும் உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்கவேண்டும். அவற்றுக்கு மாற்றாக புதிய வாகனங்களை அரசு இயக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story