திருச்சி மாநகரில் முதல் நாளில் 150 பேருக்கு அபராதம் விதிப்பு
திருச்சி மாநகரில் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 150 பேருக்கு புதிய சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 150 பேருக்கு புதிய சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்பட்டது.
மோட்டார் வாகன சட்டம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத விகிதங்களை மாற்றி அமைத்து கடந்த 20-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. காவல்துறை சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் என்று கூறி இருந்த நிலையில் நேற்றே அமல் படுத்தப்பட்டது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2-வது முறை ரூ.1,500 வரை வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை ரூ.500, 2-ம் முறை ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும்.
புதிய அபராதம்
அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கார்கள், ஜீப்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கு ரூ.10 ஆயிரம், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் என 46 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராதத்தொகை நேற்று ஒரே நாளில் சுமார் 150 பேரிடம் வசூலிக்கப்பட்டது. பல இடங்களில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.