1,500 ஏக்கர் விளைநிலங்களை கடல்நீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் சேதம்
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம், நெய்தவாசல் கிராமங்களில் 1,500 ஏக்கர் விளைநிலங்களை கடல்நீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே பெருந்தோட்டம், நெய்தவாசல் கிராமங்களில் 1,500 ஏக்கர் விளைநிலங்களை கடல்நீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடல் நீர் சூழ்ந்தது
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் சீர்காழி அருகே தொடுவாய், மடவாமேடு ஆகிய மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து, குடியிருப்புகளை சூழ்ந்தது.திருவெண்காடு அருகே செல்லன் ஆறு, புதுகுப்ப வாய்க்கால் மற்றும் சிங்கார வடிகால் வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக கடல் நீர் சின்னப் பெருந்தோட்டம் மற்றும் நெய்தவாசல் கிராமங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் கடல்நீர் சூழ்ந்தது.
இதனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெற்பயிர்கள் அழுகின
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் சம்பா நெற்பயிர்கள் அழுகிவிட்டன. மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்களுக்கு உரங்கள் தெளித்து காப்பாற்றி வந்தோம்.தற்போது கடல் நீர் சூழ்ந்ததால் அந்த பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
நிவாரணம் வழங்க வேண்டும்
மேலும் கடந்த மாத மழையால் பாதிக்கப்பட்ட ெநற்பயிர்கள் குறித்து வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு முடித்து விட்டனர். ஆனாலும் அரசு இதுவரை நிவாரணம் வழங்க முன்வரவில்லை. தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றனர்.