எழுமலை பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி மனு- கூட்டத்தை புறக்கணித்த 16 கவுன்சிலர்கள்
எழுமலை பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி செயல் அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி கூட்டத்தை 16 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
உசிலம்பட்டி,
எழுமலை பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி செயல் அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி கூட்டத்தை 16 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
சாதாரண கூட்டம்
மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சியில் 12 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க கவுன்சிலர்கள், 2 அ.ம.மு.க. என 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகஜோதி சிறைச்செல்வம், செயல் அலுவலர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் 18 கவுன்சிலர்களில் 16 பேர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட மறுத்ததுடன் பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
வளர்ச்சிப் பணிகளை பிரித்துக் கொடுப்பதில் ஒரு தலைப்பட்சம் காட்டி வருகிறார் என குற்றச்சாட்டி கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் அத்துடன் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் செயல் அலுவலர் நீலமேகத்திடம் கொடுத்துவிட்டு அரங்கத்தை விட்டு வெளியேறினர். பேரூராட்சி அலுவலகம் முன்பு தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து பேரூராட்சி தலைவர் ஜெயராமனிடம் கேட்ட போது, நான் அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த செயல்பாட்டில் ஈடுபடவில்லை. அரசு வழங்கும் நிதியை முறையாக செயல்படுத்தி வருகிறேன் என்றார். தி.மு.க. சார்பில் 11 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. சார்பில் 4 கவுன்சிலர்களும், அ.ம.மு.க. சார்பில் ஒரு கவுன்சிலரும் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் எழுமலை பேரூராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.