தூத்துக்குடி அருகே பீடிஇலைகளுடன்நடுக்கடலில் பிடிபட்ட 16 பேரிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
தூத்துக்குடி அருகே பீடிஇலைகளுடன்நடுக்கடலில் பிடிபட்ட 16 பேரிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பிடிபட்ட இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 16 பேரிடம் சுங்கத்துறையினர் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது கியூ பிரிவு போலீசார் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சுங்கத்துறை வசம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 14-ந் தேதி கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடியில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்ற படகுகளை மடக்கி பிடித்தனர்.
கைது
இலங்கையை சேர்ந்த 2 படகுகளில் ஒருபடகில் இலங்கை கல்பிட்டி பகுதியை சேர்ந்த ரனில் சமரா (வயது 31), உதரகாசன் (27), செகான் ஸ்டீபன் (24) ஆகிய 3 பேரும், மற்றொரு இலங்கை படகில் சஞ்சீவா (30), சுதேஷ் சஞ்சீவா (18), சங்கல்ப ஜீவானந்தா (19) ஆகியோர் இருந்தனர். மேலும் அந்த பகுதியில் தூத்துக்குடியை சேர்ந்த 2 படகுகள் இருந்தன. அந்த படகுகளில், தூத்துக்குடியை சேர்ந்த சேவியர் துரைராஜ் (23), லாமின்டன் (32), காட்வின் (23), ராபிஸ்டன் (23), நிஷாந்த் (34), ராமநாதபுரம் ஆற்றங்கரையை சேர்ந்த சேவியர் (32), கீழவைப்பாரை சேர்ந்த கிங்ஸ்டன் (37), ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கல்லத்திகிணறை சேர்ந்த வெரினோ (22), கன்னியாகுமரி சுனாமிகாலனியை சேர்ந்த கோல்வின் (45), திரேஸ்புரத்தை சேர்ந்த சசிகுமார் ஆகிய 10 பேர் இருந்தனர். இவர்களின் படகில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3¾ டன் பீடி இலை மூட்டைகளும் இருந்தன. உடனடியாக கடலோர காவல்படையினர் 16 பேரையும் கைது செய்து கரைக்கு அழைத்து வந்தனர்.
வழக்கு
நேற்று முன்தினம் இரவு 16 பேரையும் கடலோர காவல்படையினர், தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து பீடி இலை கடத்தி சென்ற 10 பேர் மீதும் சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேரும் நேற்று இரவு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு வழக்கு பதிவு செய்து, 6 பேரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.