பரப்பாடி அருகே தோட்டத்தில் 16 நல்ல பாம்புகள் பிடிபட்டன


பரப்பாடி அருகே, தோட்டத்தில் 16 நல்ல பாம்புகள் பிடிபட்டன. அவை வனத்துறையினர் மூலம் காட்டில் விடப்பட்டன.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள சவளைக்காரன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மன்னராஜா மகன் பெரியசாமி (வயது 40). விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள அறையில் பல நாட்களாக பெரிய நல்ல பாம்பு ஒன்று வருவதும், போவதுமாக இருந்துள்ளது. தினமும் தோட்டத்திற்கு வரும் பெரியசாமி அந்த பாம்பை அடிக்க வேண்டாம் தானாக போய்விடும் என்ற எண்ணத்தில் தினமும் கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த நல்ல பாம்பு அந்த அறையில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அடைகாத்துள்ளது.

இதுகுறித்து பெரியசாமி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு நேற்று தகவல் கொடுத்தார். நாங்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். அந்த அறையில் இருந்த நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய நல்ல பாம்பு மற்றும் குட்டி நல்ல பாம்புகள் படம் எடுத்து ஆடின. பின்னர் பாம்புகளை லாவகமாக பிடித்தனர். ஒரு பெரிய நல்ல பாம்பும், 1 அடி நீளமான 15 குட்டி நல்ல பாம்புகளும் பிடிபட்டன. பிடிபட்ட நல்ல பாம்புகள் அனைத்தும் களக்காடு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை காட்டில் விடப்பட்டன.


Next Story