லாரியில் கடத்தி வரப்பட்ட 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 16 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
வாகன சோதனை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது அதில் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 280 மூட்டைகளில் 16 டன் ரேஷன் அரிசி இருந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் மேற்கு தெருவை சேர்ந்த சாரதி மகன் ரகோத்தமன்(வயது 27) என்பதும், எலவனாசூர்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ரகோத்தமனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.