தூத்துக்குடி மாவட்டத்தில் 16,498 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது


தூத்துக்குடி மாவட்டத்தில் 16,498 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் புதன்கிழமை காலையில் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் புதன்கிழமை காலையில் தொடங்கி வைத்தார்.

இலவச சைக்கிள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 56 அரசு பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 139 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 673 மாணவர்கள், 8 ஆயிரத்து 825 மாணவிகள் ஆக மொத்தம் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 175 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க நிகழ்ச்சி

இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 236 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

16,498 பேருக்கு சைக்கிள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 498 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச சைக்கிளை வழங்கி உள்ளது. இந்த சைக்கிளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும் கொரோனா காலத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளின் மனநிலை மாறி உள்ளது. படிக்காமல், பரீட்சை எழுதாமல் பாஸ் ஆகிவிடாலாமா என்று நினைக்கிறார்கள். அவ்வாறு பாஸ் ஆனால் எந்த பலனும் இருக்காது. அந்த எண்ணத்தை தூக்கி எறிந்து விட வேண்டும். தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை படித்து விட்டால் எந்த சிரமமும் இருக்காது. தேர்ச்சி பெறுவதற்காக மட்டும் படிக்கவில்லை. அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் படிக்கிறோம். ஆகையால் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். படிப்பு, விளையாட்டு, நண்பர்களுடன் இருத்தல் போன்ற ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். டி.வி.சீரியல்களை மாணவிகளை அடிமைப்படுத்திவிடுகிறது. தற்போதைய சீரியல்கள் அறிவை வளர்க்கும் வகையில் இல்லை. அதே போன்று செல்போன்களை நல்ல விஷயங்களுக்காக மட்டும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் நண்பர்களை சேர்ப்பது தேவையற்றது. மனதை கட்டுப்படுத்தினால் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும்.

நல்ல முடிவு

மாணவிகள் எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்காக குழம்பக்கூடாது. பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டுப்பாட்டுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. அதனை மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவிகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். கீழ்படிதல் உள்ள மாணவ, மாணவிகள் நல்ல நிலையை அடைவார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் புகார் கொடுக்க தயங்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் செல்வக்குமார், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், பள்ளி தலைமை ஆசிரியை ஞானம் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story