மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை ஆர்வமுடன் எழுதிய மாணவ-மாணவிகள் -முதல் நாள் தமிழ் தேர்வுக்கு 1,669 பேர் வரவில்லை
மதுரை மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். மேலும் முதல் நாள் தமிழ் தேர்வுக்கு 1,669 பேர் வரவில்லை.
மதுரை மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். மேலும் முதல் நாள் தமிழ் தேர்வுக்கு 1,669 பேர் வரவில்லை.
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வை 323 பள்ளிகளை சேர்ந்த 37,457 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,734 மாணவர்களும், 18,723 மாணவிகளும் அடங்குவர். முதல் நாளான நேற்று தமிழ் மொழிப்பாடத்தேர்வு மற்றும் பிற மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
தமிழ் மொழிப்பாட தேர்வுக்கு 35,804 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,668 மாணவ, மாணவிகள் தேர்வெழுத வரவில்லை. இந்தி மொழிப்பாடத்தை 78 மாணவர்களும், சமஸ்கிருத மொழிப்பாடத்தை 167 மாணவர்களும், பிரெஞ்சு மொழி தேர்வை 434, உருது மொழி தேர்வை 5 மாணவ, மாணவிகளும் எழுதினர். அதன்படி, 36,489 மாணவ, மாணவிகளில் 1,669 பேர் தேர்வெழுத வரவில்லை. இதில் பள்ளி மாணவர்கள் 35,982 பேரும், தனித்தேர்வர்கள் 507 பேரும் அடங்குவர். தனித்தேர்வர்களில் 65 பேர் தேர்வெழுத வரவில்லை.
3-ந்தேதி வரை
பிளஸ்-2 தேர்வுக்காக மதுரை மாவட்டம் முழுவதும் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையிலான பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மையங்கள் 9 இடங்களில் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வுகள் வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது.
திடீர் ஆய்வு
இதற்கிடையே கண்பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்றைய தேர்வை ஒரேயொரு மாற்றுத்திறனாளி மாணவர் மட்டும் உதவியாளர் மூலம் எழுதினார். 8 ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான சிறப்பு பறக்கும்படையினர் மாவட்ட முழுவதிலும் உள்ள தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மின்தடை இல்லாமல் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வசதியாக மின்வாரியத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள் தேர்வுக்கூடத்துக்குள் எலக்ட்ரானிக் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
படித்த கேள்விகள் வந்தன
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த எல்.கே.ஜெயமதன்லால்: மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பில் வணிகவியல் துறையில் படித்து வருகிறேன். என்னுடைய தாயார், கல்லூரியில் தமிழ்துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அதனால், தமிழ் மீது எனக்கு எப்போதும் அதிக பற்று உண்டு. நேற்று நடந்த தமிழ் தேர்வானது நினைத்தது போன்று எளிமையாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள், படித்ததில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் எழுதி இருக்கிறேன். ஒரு சில ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே கடினமாக இருந்தது. அதாவது, 14 ஒரு மதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அதனை தவிர குறுவினா, நெடு வினாக்கள் எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இருந்தது.
தமிழ் தேர்வு கடினம்
திருப்பரங்குன்றம் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவன் பார்த்திபன்: முதல்நாள் தேர்வான தமிழ் தேர்வில் குறுவினாக்கள், சிறுவினாக்கள் எதிர்பார்த்தபடியே பல வினாக்கள் வந்து இருந்தன. நெடுவினாக்களும் எளிமையாகவும், மதிப்பெண் எடுப்பதற்கு ஏதுவாகவும் வந்து இருந்தன. ஆனால் ஒரு மதிப்பெண் வினாவிடைகள் சற்று கடினமாகவும், எதிர்பாராத வினாக்களாகவும் வந்து இருந்தது. தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவதில் ஒரு மதிப்பெண் வினா விடைகள் சற்று சிரமத்தை ஏற்படுத்தியது.
மாணவன் வீரமணி: தமிழ் தேர்வில் 2 மதிப்பெண், 4 மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் கேள்விகளுக்கு எளிதாக பதில் எழுத முடிந்தது. இதே சமயம் ஒரு மதிப்பெண் கேள்விகள் எதிர்பார்த்த மாதிரி இல்லை. அதனால் சற்று கடினமாக இருந்தது.
நல்ல மதிப்பெண் கிடைக்கும்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா: பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத சென்றேன். முதலில் பயமாக இருந்தது பின் வினாக்களை படித்த பின் பயம் தெளிந்தது. இதில் தமிழ் தேர்வு வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. அதில் ஒரு மதிப்பெண் வினா கொஞ்சம் கடினமாக இருந்தது. 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 4 மதிப்பெண் மற்றும் திருக்குறள், இலக்கணக்குறிப்பு உள்ளிட்ட அனைத்தும் பாடப்புத்தக உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டது. பள்ளியில் அடிக்கடி திருப்புதல் தேர்வு நடத்தியதால் எளிதாக எழுத முடிந்தது.
புஸ்கோஸ் பள்ளி மாணவன் விஜய்: தமிழ் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்தது. குறுவினா, நெடுவினா அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. பாட புத்தகத்தில் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. நெடு வினாவுக்கு நல்ல முறையில் பதில் அளித்து விட்டேன். நல்ல மதிப்பெண் பெறுவேன்.
மகிழ்ச்சி
மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த மாணவர் ஈஸ்வர் : பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது. இனிவரும் தேர்வுகளும் இதுபோன்று இருந்தால் மிக்க மகிழ்ச்சி தரும். நல்ல மதிப்பெண்களும் கிடைக்கும்.