17 துப்புரவு தொழிலாளர்கள் திடீர் பணி நீக்கம்
புவனகிரி பேரூராட்சியில் 17 துப்புரவு தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி:
புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் 86 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், குப்பைகளை அள்ளி வந்தனர். இதனிடையே ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் அரசுக்கு பணம் இழப்பு ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. எனவே துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடர்பாக பேரூராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, துப்புரவு தொழிலாளர்களை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
17 பேர் பணி நீக்கம்
அதன்படி 86 ஒப்பந்த தொழிலாளர்களில் 17 பேரை பேரூராட்சி நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்தது. இதையடுத்து 17 தொழிலாளர்களும், மீண்டும் வேலை வழங்கக்கோரி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவரிடம் வலியுறுத்தினர். இருப்பினும் அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 17 தொழிலாளர்களும் மீண்டும் வேலை வழங்கக்கோரி நேற்று காலை 10 மணிக்கு புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சில தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
இவர்களிடம் தாசில்தார் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சம்பந்தபட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் புவனகிரி தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.