17 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் 108 ஆம்புலன்ஸ்


17 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் 108 ஆம்புலன்ஸ்
x

கறம்பக்குடி அருகே குண்டும், குழியுமான சாலையால் 108 ஆம்புலன்ஸ் 17 கி.மீ. சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. இதனால் அவசர சிகிச்சை நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை

கர்ப்பிணிகள்

கறம்பக்குடி அருகே மழையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர சிகிச்சைக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் வரவேண்டிய நிலை உள்ளது.

கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு, முள்ளங்குறிச்சி, மறவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

கிராமமக்கள் அவதி

இந்தநிலையில் மழையூரில் இருந்து மங்கான் கொல்லைபட்டி வழியாக சூரக்காடு செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக மிக மோசமாக உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் இருசக்கர வாகனங்கள் கூட இந்த சாலையில் செல்ல முடிவதில்லை. இந்த சாலையில் பயணிக்க முடியாததால் சூரக்காடு பகுதியில் இருந்து அவசர நோயாளிகள், கர்ப்பிணிகளை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் 17 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த குண்டும், குழியுமான சாலையால் அப்பகுதியில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல 17 கிலோ மீட்டர் சுற்றி செல்வது வேதனையாக இருப்பதாகவும் எனவே மழையூர்- சூரக்காடு சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story