இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.17¾ லட்சம் மோசடி
இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.17¾ லட்சம் மோசடி
குனியமுத்தூர்
கோவையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் வாடிக்கையாளரிடம் இருந்து வசூல் செய்த ரூ.17¾ லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இருசக்கர வாகன ஷோரூம்
ஈரோடு சஞ்செய் நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவர் கோவை குனியமுத்தூரில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். இந்த ஷோரூமில் குனியமுத்தூரை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் கடந்த 8 மாதமாக மேலாளராக வேலை செய்து வருகிறார்.
ஷோரூம் உரிமையாளரான பாலாஜி, அலுவலக நிர்வாகத்தை ராஜேஷ் குமாரிடம் ஒப்படைத்ததுடன், ஷோரூம் வரவு- செலவு கணக்கையும் பார்த்துக்கொள்ளவும் கூறினார். ஆனால் சில நாட்களாகவே ஷோரூம் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை.
ரூ.17¾ லட்சம் மோசடி
இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி, தனது ஷோரூமுக்க வந்து வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 700 கணக்கில் செலுத்தப்படாமல் இருந்தது. உடனே இது தொடர்பாக அவர் அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கு மேலாளராக வேலை செய்து வந்த ராஜேஷ் குமார், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை ஷோரூம் கணக்கில் செலுத்தாமல் அதை தனது வங்கி கணக்கில் செலுத்தி ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்த 700-ஐ மோசடி செய்தது தெரியவந்தது.
மேலாளருக்கு வலைவீச்சு
இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தகவல் அறிந்த ராஜேஷ் குமார் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.