முறுக்கு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 17½ பவுன் நகை திருட்டு

கந்தர்வகோட்டையில் முறுக்கு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் 17½ பவுன் நகைகள், மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்தையும் திருடி சென்றனர்.
முறுக்கு வியாபாரி
புதுக்ேகாட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), முறுக்கு வியாபாரி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகளின் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அருகே உள்ள அவரது தங்கை ஜமுனாவுக்கு தகவல் கொடுத்தனர். இதனைதொடர்ந்து அவர் முருகேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.
நகை, பணம் திருட்டு
இதையடுத்து, போலீசார் மற்றும் முருகேசனுக்கு ஜமுனா தகவல் கொடுத்தார். அதன்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டில் ைவத்திருந்த 17½ பவுன் நகைகள் மற்றும் முருகேசன் மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்தையும் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் போலீசில் சிக்காமல் இருக்க வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.






