சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் 170 பவுன் நகை-பணம் கொள்ளை
குஜிலியம்பாறை அருகே சிமெண்டு ஆலை அதிகாரி வீட்டில் 170 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் அவர்கள், 3 வீடுகளில் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிமெண்டு ஆலை அதிகாரி
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலியில் தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையின் முதுநிலை மேலாளராக திருநாவுக்கரசு (வயது 55) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், ஆலைக்கு அருகே உள்ள அலுவலர்கள் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவருடைய மனைவி கவிதா (49) மருத்துவ சிகிச்சைக்காக கரூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் திருநாவுக்கரசு, தனது மனைவியை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் இரவு கரூர் சென்றார்.
170 பவுன் நகை கொள்ளை
இந்தநிலையில் நேற்று காலை அவர் திரும்பி வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 170 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து, குஜிலியம்பாறை போலீசாருக்கு திருநாவுக்கரசு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி மற்றும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் 3 வீடுகளில் கைவரிசை
விசாரணையில், முதுநிலை மேலாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், அதே குடியிருப்பு பகுதியில் மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. அதாவது, அந்த குடியிருப்பில் வசிக்கிற உதவி பொதுமேலாளர்கள் செந்தில் (42), பாஸ்கர் (43) ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து முறையே ரூ.10 ஆயிரம், ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இதேபோல் அங்கு வசிக்கிற மற்றொரு உதவி பொதுமேலாளர் வேல்முருகன் (59) என்பவர் வீட்டின் பூட்டையும் உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர்கள் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதைத்தொடர்ந்து கொள்ளை நடந்த வீடுகளுக்கு தடயவியல் நிபுணர்கள் வந்து பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர்.