கெங்கையம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 1,700 போலீசார்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 1700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 1700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்.
கெங்கையம்மன் கோவில் திருவிழா
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக சிரசு ஊர்வலத்தின் போது பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்கின்றனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், நாளை (திங்கட்கிழமை) அம்மன் சிரசு ஊர்வலமும் நடக்கிறது.
டி.ஐ.ஜி. ஆய்வு
திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சிரசு ஊர்வலம் தொடங்கும் தரணம்பேட்டை பஜார் முத்தாலம்மன் கோவிலில் இருந்து சிரசு செல்லும் பாதைகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கோவில் வளாகம், கோவில் வெளிப்புறத்தில் இருந்து பக்தர்கள் கோவில் உள்ளே செல்லும் வழிகள் மற்றும் வெளியே வரும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, முகேஷ்குமார், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
1700 போலீசார்
திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 6 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர் உள்பட 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கோவில் திருவிழா பாதுகாப்புக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையிலிருந்து 100 பேர் கொண்ட பட்டாலியன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் குற்றங்களை தடுக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சாதாரண உடையில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
கோவில் வளாகத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப்படும். டிரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்படும். பக்தர்கள் நெரிசல் இன்றி அனைவரும் அம்மனை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அம்மனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.