சேலத்தில் 173 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைகள் கண்டறியப்பட்ட 6 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
சேலத்தில் நேற்று பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் குறைகள் கண்டறியப்பட்ட 6 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
சூரமங்கலம்,
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தி அதன் உறுதித்தன்மையை அறிந்து சான்றிதழ் வழங்க வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி சேலம் 3 ேராடு அருகே உள்ள ஜவகர் மில் திடலில் நேற்று நடைபெற்றது.
இதில் சேலம் துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ ராஜன் தலைமையில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நடைபெற்றது.
இந்த சோதனையில் பள்ளி வாகனங்களில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா? பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
வேக கட்டுப்பாட்டு கருவி
இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? ரிவர்ஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? மேலும் வாகனத்தின் உள்ளே கேமராக்கள் பொருத்தப்பட்டு அது இயங்குகிறதா? கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.
மேலும் அவசரகால கதவு நல்ல நிலையில் உள்ளதா? சரிவர இயங்குகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர். டிரைவர்கள், உதவியாளர்கள் பள்ளி வாகனத்தில் தீப்பற்றினால் அதை எவ்வாறு துரிதமாக செயல்பட்டு தடுப்பது என்பது குறித்து சூரமங்கலம் தீயணைப்பு துறை ஆய்வாளர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
173 வாகனங்கள்
நேற்று மொத்தம் 173 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 6 வாகனங்களில் சிறு சிறு குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்து வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் மீண்டும் காண்பிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த வாகன ஆய்வில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் நங்கன், வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சரவணன் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.