சென்னையில் 17-ந்தேதி அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்


சென்னையில் 17-ந்தேதி அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்
x

சென்னையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கொடி ஏற்றுகிறார்.

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.

மேலும் கடந்த 20.8.2023 அன்று மதுரையில் நடந்த பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு வருகை தந்தபோதும், மாநாடு முடிந்து ஊர் திரும்பும்போதும், எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதியுதவியும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியும் கட்சியின் சார்பில் வழங்கப்படும். இதனை எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார்.

கட்சிக் கொடி

இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள்பட கட்சியில் பல்வேறு வகையான அணி பிரிவை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் 52-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி, கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கட்சி கொடி கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக்கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக்கம்பங்களை அமைத்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், ஏழை-எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கட்சியின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story