17-ம் நூற்றாண்டு வருணன் சிலை கண்டெடுப்பு
திருச்சுழி அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த வருணன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
காரியாபட்டி,
திருச்சுழி அருேக 17-ம் நூற்றாண்டை சேர்ந்த வருணன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கள ஆய்வு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட உழக்குடி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் அருப்புக்கோட்டை ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பு ஆய்வு செய்தனர். அப்போது பழமையான வருணன் சிற்பத்தை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- உழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் மிகப்பெரிய கண்மாயில் பழமையான குமிழித்தூண் உள்ளது. குமிழித்தூணின் உயரம் 15 அடி ஆகும். அதில் ஒரு வருணன் சிலை இருந்தது.
வருணன் சிற்பம்
இவர் மழைக்கு அதிபதி ஆவார். இவர் அஷ்டத்திக்கு பாலகர்களில் ஒருவர். மேற்கு திசைக்கு உரியவரான இவரின் வாகனம் முதலையாகும். இவரின் மனைவியின் பெயர் வாருணி. வருண பகவானை வழிபடும்போது தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்கிறது. இது மக்களின் ஒரு நம்பிக்கையாகும்.
இந்த சிற்பத்தின் உயரம் 3 அடியாகும். இந்த சிற்பத்தில் வருண பகவான் நான்கு கரங்களோடு காட்சி தருகிறார். தலையில் காணப்படும் மகுடம் கரண்ட மகுடமாக காணப்படுகிறது. மகுடத்திற்கு மேல் பூந்தோரணம் காணப்படுகிறது. கழுத்தில் ஆபரணங்கள் காணப்படுகின்றன. இடுப்பில் உதிரபந்தம் காணப்படுகிறது.
நீருக்கு அதிபதி
2 கால்களிலும் தண்டை அணிந்து உள்ளார். ஒரு பீடத்தில் அழகாக சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். நமது முன்னோர் அஷ்டத்திக்கு பாலகர்களை அவர்கள் எதற்கு அதிபதியோ அதற்கு ஏற்றாற்போல் அந்தந்த இடங்களில் அவர்களின் சிற்பங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளனர். அந்த வகையில் உழக்குடி கண்மாயில் நீருக்கு அதிபதியான வருணனின் சிற்பத்தை வடித்து நமது முன்னோர் வணங்கி வந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.
இவர் வருடத்தில் பெரும்பாலான நாட்களில் நீருக்குள் மூழ்கியே இருப்பதால் அந்தப்பகுதியில் எப்பொழுதுமே விவசாயம் மிகவும் செழிப்பாக நடைபெற்று வருகிறது என்கின்றனர்.
17-ம் நூற்றாண்டு
ஆரம்ப காலங்களில் நமது பாண்டிய மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நாயக்கர் மன்னர்களும் அவர்கள் வழியை பின்பற்றி நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். அதற்கு சாட்சியாக உழக்குடி கிராமத்தில் இன்னும் இந்த குமிழித்தூண் வானுயர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறது. இதன் காலம் 17-வது நூற்றாண்டாக இருக்கலாம்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.