தீபாவளி சீட்டு நடத்தி ரூ.18¾ லட்சம் மோசடி
தண்டராம்பட்டு அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.18¾ லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தண்டராம்பட்டு அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.18¾ லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தீபாவளி சீட்டு
தண்டராம்பட்டு தாலுகா எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாரி, தென்முடியனூர் டி.ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தீபா, ருக்குமணி, ரேகா, பரிமளா ஆகியோர் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 350 பேரிடம் மாதம் ரூ.500, ரூ.200 என்ற முறையில் 10 மாதங்கள் என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு பிரித்து தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் வழங்கினோம்.
தலைமறைவு
இதன் மூலம் அவர் எங்களிடம் இருந்து சுமார் ரூ.18 லட்சத்து 71 ஆயிரத்து 600-ஐ பெற்று கொண்டார். ஆனால் அவர் தீபாவளி சீட்டில் விளம்பரம் படுத்தியபடி பொருட்களோ, பணமோ கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது ஊர் பெரியவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியனர்.
அப்போது அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் 40 நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்தனர். ஆனால் 50 நாட்கள் கடந்தும் அவர்கள் யாரும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
பஞ்சாயத்து பேசியவர்கள் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தட்டி கழிக்கிறார்கள்.
பணம் செலுத்திய நாங்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்பவர்கள். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து அந்த நபரிடம் இருந்து எங்கள் பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.