லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
விருதுநகரில் இருந்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரையும் கைது செய்தனர்.
செங்கோட்டை:
விருதுநகரில் இருந்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரையும் கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புளியரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தமிழக- கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக லாரி டிரைவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் கல்லோடு பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் சந்தோஷ்குமார் (வயது 44) என்பதும், கேரளாவுக்கு கடத்துவதற்காக விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லோடு பகுதிக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம், பறிமுதல் செய்யப்பட்ட 18 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் ஒப்படைத்தனர்.