அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே அரிசி ஆலையில் பதுக்கிவைக்கப்பட்டுஇருந்த 1,850 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல் அரவை ஆலைகள்

தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரவை ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பப்படும். பின்னர் அந்த ஆலைகளில் நெல் அரவை செய்யப்பட்டு அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்திடம் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சில நெல் அரவை ஆலைகளில், நெல்லை வாங்கிக்கொண்டு, அதனை அரவை செய்து வழங்காமல் அதற்கு பதிலாக கள்ளச்சந்தையில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை வழங்குவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

போலீசாருக்கு புகார்

அதன்பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அரிசி ஆலையில், சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு அரிசி ஆலையில் 50 கிலோ எடை கொண்ட 37 மூட்டைகளில் 1,850 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த அரிசியையும், சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

ரேசன் அரிசியை அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து வாங்கி வந்து, நெல்லை அரவை செய்யாமல் அதற்கு பதிலாக இந்த அரிசியை வழங்க திட்டமிட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அரவை ஆலை உரிமையாளர் மதுக்கூரை சேர்ந்த பரமானந்தம் (வயது 70), சரக்கு ஆட்டோ உரிமையாளர் மன்னார்குடி உள்ளிக்கோட்டையை சேர்ந்த சரவணன் (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story