ஏஜெண்டுகளை நம்பி மலேசியா சென்ற 186 பயணிகள் திருப்பி அனுப்பிவைப்பு
ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்ற 186 பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் பரிதவித்தனர்.
ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்ற 186 பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் பரிதவித்தனர்.
186 பேர் திருச்சி வந்தனர்
வெளிநாட்டு வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏராளமானோர் வெளிநாடு சென்று அங்கு ஏமாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இவ்வாறு ஏமாற்றப்பட்ட திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 186 பேர் மலேசியா நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அறையில் அடைத்து வைத்தனர்
பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏஜெண்டுகள் மூலமாக சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற அவர்கள் அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். இதை கண்டறிந்த மலேசிய அரசு சுற்றுலா விசா மூலமாக இங்கு வேலைக்கு வரக்கூடாது என கூறி, அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் திரும்பி செல்ல அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் அவர்களுக்கு முறையாக சாப்பாடு வழங்காமலும், சரியான வசதிகள் செய்து கொடுக்காமலும், குடிப்பதற்கு கழிப்பிட நீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வற்புறுத்தியதாக மலேசியாவில் இருந்து திரும்பியவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது:- ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம். அவ்வாறு சென்றால் பணத்தை இழப்பதுடன் அவமானப்படுத்தப்படுவோம். எனவே யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம். ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை கொடுத்து மலேசியாவிற்கு சென்றோம். தற்போது பணத்தை இழந்து பரிதவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.