187 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்
அரக்கோணத்தில் 187 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
அரக்கோணத்தில் 187 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
உதவி உபகரணங்கள்
அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் சென்னை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சுமார் 187 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி பேசினார்.
அப்போது தமிழ்நாட்டிலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான நலத்திட்டங்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேரும் வகையில் அதிகமான முகாம்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கட்டணமில்லா தொலைபேசி
முன்னதாக அரக்கோணம் நகராட்சி சில்வர்பேட்டை நகராட்சி உரக்கிடங்கு 4 ஏக்கர் காலி இடத்தில் நகர்ப்புற காடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.5.18 லட்சம் மதிப்பீட்டில் 2000 மாக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சியிலுள்ள பொதுமக்கள் அடிப்படை பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவையினை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அரக்கோணம் ஒன்றியம் வேலூர் ஊராட்சியில் ரூ.14.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை, குருவராஜப்பேட்டை காந்திநகர் பகுதியில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி, ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா சவுந்தர், நகரமன்றத் துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர செயலாளர் வி.எல்.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அம்பிகா பாபு, நகராட்சி ஆணையர் லதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.