18-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு
பழனியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது
பழனி மலைக்கோவில் ஸ்தானீக மிராஸ் திருமஞ்சனப் பண்டாரங்களான சக்திவேல் மற்றும் ஜெயம் கருப்பையா ஆகியோர் ஒரு தெய்வச்சிலை செப்புப் பட்டயத்தை பாதுகாத்து வைத்திருந்தனர். அதனை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இது செங்குந்த முதலியார்கள் சூரசம்ஹார மண்டகப்படியின்போது வழங்கியதாகும். இந்தப் பட்டயம் 1.7 கிலோ எடை, உயரம் 18 செ.மீட்டர், நீளம் 45 செ.மீட்டராக உள்ளது.
பட்டயத்தின் மேல் பகுதியில் சூரியன், சந்திரரும், கீழ் பகுதியில் முருகன் பிள்ளையாருடன், செங்குந்தர்களின் குலதெய்வங்களான நவவீரர்கள் கைகளில் வாள், கேடயத்துடன் இருக்கும் வகையில் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனின் வலதுபுறம் செங்குந்தம் எனும் ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் பின்பகுதியில் வலதுபுறம் தமிழ் எழுத்துகளும், இடதுபுறம் வடமொழி கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துகளில் சண்முக வாத்தியாரின் பேரன் ஒரு ஓலைச்சுவடி எழுதியதாகவும், அதைப் பார்த்து நஞ்சய பண்டாரம் என்பவர் செங்குந்த முதலியார்களின் வேண்டுகோள்படி பட்டயம் எழுதியதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
வடமொழி கிரந்த எழுத்துகளில் ஸ்ரீதெண்டாயுதபாணி ஸ்காயம் (தண்டபாணி துணை) என்று எழுதப்பட்டுள்ளது. 2 மொழிகளிலும் எழுத்துகள் 6 வரிகளில் மடக்கி எழுதப்பட்டுள்ளன. பட்டயத்தில் எழுதுவதற்கு அதிக இடமிருந்த போதும், 6 வரிகளில் மடக்கி எழுதப்பட்டிருப்பது, முருகனுக்குரிய எண் 6 என்பதால் இருக்கலாம். பட்டயத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துகளை வைத்து பார்க்கும்போது, அவை கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என்றார்.