சாலை மறியலில் ஈடுபட்ட 19 விவசாயிகள் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 19 விவசாயிகள் கைது
x

கயத்தாறில் சாலை மறியலில் ஈடுபட்ட 19 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளர்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பருத்தி விதைகளை உரக்கடைகளில் வாங்கி அதனை பயிரிட்டனர். இந்த பருத்தி செடிகள் வீரியம் இல்லாமல் கருகி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வேளாண்மை விரிவாக்க மைய உதவி செயற் பொறியாளர் சுரேஷ் ஆகியோரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தாசில்தார் முன்னிலையில் தனியார் விதை கம்பெனி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று காலையில் கயத்தாறில் தரமற்ற பருத்தி விதைகளை வழங்கிய தனியார் கம்பெனிகளை கண்டித்து பருத்தி செடிகளுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க தென்மண்டல அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கயத்தாறு ஒன்றிய செயலாளர் கல்யாணபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஒரு பெண் உள்பட 19 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கயத்தாறில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story