மேலூர் அருகே ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டுக்கு சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் காயம்
திருச்சியில் நடந்த ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது, வேன் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
மேலூர்
திருச்சியில் நடந்த ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது, வேன் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்து உருண்டது
திருச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ேநற்று முன்தினம் நடத்திய மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 19 பேர் ஒரு வேனில் சென்று கலந்துகொண்டனர்.
மாநாடு முடிந்து அவர்கள் திருச்சியில் இருந்து அதே வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுரை நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் வந்தனர்.
சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர மின்கம்பத்தில் மோதி பக்கவாட்டில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் வேனில் வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார், சுங்கச்சாவடி ரோந்து குழு தலைவர் கார்த்திக், மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாண்டி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் வேனில் வந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 50), வள்ளிமயில் (62), சிவநாதன் (49), ராஜகிருஷ்ணன் (48), செல்வராஜ் (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.