மகளிர் இலவச பஸ் பயண திட்டத்திற்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு


மகளிர் இலவச பஸ் பயண திட்டத்திற்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு
x

தமிழக முதல்-அமைச்சர் மகளிர் இலவச பஸ் பயண திட்டத்திற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

கிருஷ்ணகிரி

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனையில், நகர் மற்றும் புறநகர் பஸ் இயக்கம் குறித்து கிளை மேலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் பொன்முடி, பொதுமேலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புறநகர் கிளை பணிமனை வளாகம், பஸ்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிருக்கான இலவச பஸ் பயணத்தின் மூலம் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கான இலவச பஸ் கட்டணமாக கடந்த ஆண்டு ரூ.1,600 கோடியும், இந்த நிதியாண்டில் ரூ.1,900 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சேலம் மண்டலம் நஷ்டத்தில் இருந்து தற்போது லாபகரமாக செயல்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப் குழு

மேலும், தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட, கிருஷ்ணகிரி, ஓசூர் சாலை வழியில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவு உள்ளதால், கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு செல்வதற்கு ஏதுவாக சேலம் மண்டலத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களின் தொலைபேசி எண்கள் பெற்று வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படும்.

இதில் எந்த பகுதியில், எந்த நேரத்திற்கு பஸ் சேவை தேவைப்படுகிறது என்பதை தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தால், பள்ளி தொடங்கும் நேரத்தில் பஸ்கள் இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் பஸ்கள் நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலை உள்ளது. அதனை சரிசெய்ய பஸ்களில் காய்கறிகள் ஏற்றி செல்லவும், பஸ்களின் இருபுறங்களிலும் விளம்பர பலகை வைத்து வருவாய் ஈட்டவும், பிற செலவினங்களை குறைத்து போக்குவரத்து கழகங்களை லாபகரங்களாக இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக 2 ஆயிரத்து 35 பஸ்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், போக்குவரத்து கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story