இலங்கை கடைசி தமிழ்மன்னர் 191-ம் ஆண்டு நினைவு தினம்
வேலூர் முத்துமண்டபத்தில் இலங்கை கடைசி தமிழ்மன்னர் 191-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னர் ஸ்ரீவிக்ரமராஜ சிங்காவின் நினைவிடம் வேலூர் பாலாற்றங்கரையோரம் முத்துமண்டபத்தில் உள்ளது. இங்கு அவரின் 191-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஸ்ரீவிக்ரமராஜசிங்காவின் வாரிசுகள் மற்றும் வேலூரை சேர்ந்த பொதுமக்கள் பலர் ஊர்வலமாக அவரின் நினைவிடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆங்கிலேயர்களால் ஸ்ரீவிக்ரமராஜசிங்கா பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த வேலூர் கோட்டையில் உள்ள கண்டிமகாலை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் கண்டிமகாலை நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மன்னரின் வாரிசுகள் கோரிக்கை விடுத்தனர்.