ஒரேநாளில் 192 மனுக்கள் பெறப்பட்டன
குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாமில் ஒரேநாளில் 192 மனுக்கள் பெறப்பட்டன
வேலூர்
பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் நேற்று பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை தொடர்பாக திருத்தங்களை மேற்கொண்டனர்.
முகாமில் தாசில்தார் செந்தில், வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் (நுகர்பொருள்) வேணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, வேலூர், காட்பாடி என 6 தாலுகாவில் நடந்த முகாம்களில் 192 மனுக்கள் வரப்பெற்றது. அதில் 172 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளன.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதம் நடந்த முகாமில் 956 மனுக்கள் பெறப்பட்டன.
தற்போது முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடப்பதால் அங்குப் பலர் மனு அளித்துள்ளனர்.
எனவே இன்று (நேற்று) தாலுகா அலுவலகங்களில் நடந்த முகாமில் குறைந்த மனுக்களே பெறப்பட்டுள்ளதாக, தெரிவித்தனர்.