புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்
மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுமைப்பெண் திட்டம்
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இதுவரை 2, 3, 4-ம் ஆண்டில் பயிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகை பயன்பெற்று வந்தார்கள். தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் 11-ந்் தேதி வரை பதிவு செய்யலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்விப் பயிலும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நேரத்தில் 9150056809, 9150056805, 9150056801, 9150056810 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்கல்வி முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.