ஏரியில் 2½ ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
வெள்ளேரி கிராமத்தில் ஏரியில் 2½ ஏக்கர் ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வேண்டும் என்று உதவி கலெக்டர் தனலட்சுமி உத்தரவிட்டார்.
ஆரணி
வெள்ளேரி கிராமத்தில் ஏரியில் 2½ ஏக்கர் ஆக்கிரமித்துள்ளதை அகற்ற வேண்டும் என்று உதவி கலெக்டர் தனலட்சுமி உத்தரவிட்டார்.
ஆய்வு கூட்டம்
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வந்தன.
இதில் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து இருந்தவர்கள் விவரங்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் பேரில் இன்று மாலை ஆய்வு கூட்டம் நடந்தது.
உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமை தாங்கினார். இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மின்வாரியத்துறை, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்தும் ஆரணி, போளூர், கலசபாக்கம் ஆகிய தாலுகாவில் இருந்தும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆரணி தாலுகாவிலும், ஆரணி நகரிலும் 35-க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதுவும் நீர்நிலை புறம்போக்குகளில் இருப்பதாகவும் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டது.
அதற்குரிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் அளித்தனர்.
வீட்டு மனைப்பட்டா
மேலும் ஆரணி நகரில் காந்தி ரோடு, பழைய, புதிய பஸ் நிலையங்கள், கோட்டை மைதானம் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், நகராட்சி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் சூரிய குளம் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற நகராட்சி, நெடுஞ்சாலை துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
அப்போது எஸ்.வி.நகரம் தடுப்பணையில் இருந்து காட்டேரியான் கால்வாய் பகுதி செல்லக்கூடிய நீர்நிலை புறம்போக்கில் நீண்ட காலமாக 3 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தனர்.
அவர்களுக்கு இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலவசமாக வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கப்படும் என்றும், எனவே, அந்த இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும் அவர்களுக்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக பசுமை வீடு கட்டித் தரவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 நபர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா நகல்களை உதவி கலெக்டர் வழங்கினார்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு
மேலும் அவா் கூறுகையில், ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் உள்ள ஏரியில் 2½ ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ெரயில் பாதை சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ளும் போது வரைபடத்தை பார்த்தபோது ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரியவந்தது. எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றார்.
அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மார்ச் மாதம் 6-ந் தேதிக்குள்அகற்ற நடவடிக்ைக எடுப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆரணி, போளூர், கலசபாக்கம் தாலுகா பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த மனுக்கள் மீதும் கருத்துரை வழங்கினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.