2 ஏக்கர் நிலம், சக்குடி கிராமத்தில் மீட்பு


2 ஏக்கர் நிலம், சக்குடி கிராமத்தில் மீட்பு
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், சக்குடி கிராமத்தில் மீட்கப்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் உள்ள நிலங்களை மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு ருத்ரஜெபம் செய்யவும், அபிஷேகத்திற்கு தயிர் வழங்குவதற்காகவும் மன்னர்கள் வழங்கினார்கள். அதில் 1 ஏக்கர் 25 சென்ட் நிலத்தை தெட்சிணாமூர்த்தி என்பவர் பராமரித்து அதில் வரும் வருமானத்தை கோவில் ருத்ரஜெபம் செய்வதற்காக வழங்கி வந்துள்ளார். அதே போன்று 75 சென்ட் நிலத்தை மூக்கக்கோனார் என்பவர் பராமரித்து அதில் வரும் வருமானம் மூலம் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகத்திற்காக தயிர் வழங்கி வந்தார். இவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த செயல்களை செய்து வராமல் இருந்துள்ளனர். மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட இடத்தை வேறு சிலருக்கு விற்பனையும் செய்து விட்டனர். இதை அறிந்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பட்டா வழங்க கோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று வருவாய்த்துறையினர் கோவில் பெயரில் பட்டா வழங்கினார். அதை தொடர்ந்து கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் அதிகாரிகள் சக்குடிக்கு சென்று அந்த நிலத்தை கோவிலுக்கு சொந்தமானது என்று பெயர்பலகை வைத்தனர். இதன் மூலம் சக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.


Related Tags :
Next Story