திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 2 பேர் கைது


திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோதனை

பனியன் வர்த்தகம் தொடர்பாக நைஜீரிய நாட்டினர் திருப்பூர் வந்து தங்கியிருந்து தங்களின் சொந்த நாட்டுக்கு ஆடைகளை அனுப்பி வைத்து வருகிறார்கள். இவ்வாறு வரும் நைஜீரிய நாட்டினர், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியிருப்பது அதிகரித்து வருகிறது. விசா காலம் முடிந்தும் இதுபோல் தங்கியுள்ள நைஜீரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ராயபுரம் பகுதியில் தங்கியிருந்த நைஜீரியர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது சின்னான்நகர் பகுதியில் குடியிருந்த 3 பேரிடம் ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

2 பேர் கைது

இதில் ஒருவர் தனக்குரிய ஆவணங்களை கொண்டு வந்து போலீஸ் நிலையத்தில் கொடுத்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்ற 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. விசா வழங்கப்பட்ட காலத்தையும் தாண்டி அவர்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நைஜீரிய நாடு டேம்சூ பகுதியை சேர்ந்த பிரவுன்வூ (வயது 46), ஒலிசாக்பூ சுக்ஸ் டேவிட் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் சின்னான் நகர் பகுதியில் தங்கியிருந்து ஆடைகளை மொத்தமாக வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் செய்து வந்தனர். இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story