கார் திருடிய 2 பேர் கைது


கார் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகூரில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூரில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரை காணவில்லை

நாகையை அடுத்த நாகூர் வள்ளியம்மை நகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் விக்னேஸ்வரன் (வயது27). இவர் நாகூர் பகுதியில் காருக்கு பெயிண்ட் அடிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவருடைய பட்டறையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் தனது காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக காரை நிறுத்தி சென்றார். இந்த காரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து விக்னேஸ்வரன் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் மேலவாஞ்சூர் சின்ன ஆற்று பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு கடையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அமர்ந்திருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் 2 பேரும் விக்னேஸ்வரனின் பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் பூதங்குடி டேவிட் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் ஜான் கிருபாகரன் (25), நாகூர் தெற்கு தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் முனைப்பர் சித்திக் (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் கிருபாகரன், முனைப்பர் சித்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story