கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைத்த வழக்கில் 2 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைத்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி:-
திருத்துறைப்பூண்டியில் கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைத்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகரசபை தலைவர் தேர்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் கவிதா பாண்டியன் கடந்த மார்ச் மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த பதவிக்கு அக்கட்சியை சேர்ந்த 11-வது வார்டு நகரசபை கவுன்சிலர் ராமலோக ஈஸ்வரி என்பவரை நிறுத்த முடிவு செய்து இருந்தனர்.
ஆனால் இந்த பதவிக்கு தி.மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி துணைத்தலைவர் பதவியை ஆர்.எஸ்.பாண்டியன் உடனடியாக ராஜினாமா செய்தார்.
தனிப்படை போலீசார் விசாரணை
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அதிகாலை கவுன்சிலர் ராமலோக ஈஸ்வரி வீட்டின் முன்புறம் உள்ள சுவர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் திருத்துறைப்பூண்டி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கமலஹாசன் (வயது39), மீனாட்சி வாய்க்கால் தெருவை சேர்ந்த ஜெயராஜ் (39) ஆகிய இருவரும் கவுன்சிலர் வீட்டு சுவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.
அவதூறு பரப்பும் எண்ணத்தில்...
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், 'ராமலோக ஈஸ்வரிக்கு நகரசபை துணைத்தலைவர் பதவியை தி.மு.க. நகர செயலாளரும், நகரசபை கவுன்சிலருமான ஆர்.எஸ்.பாண்டியன் விட்டுக்கொடுக்க மாட்டார் என நினைத்து அவர் மீது அவதூறு பரப்பும் எண்ணத்தில் கமலஹாசன், ஜெயராஜ் ஆகிய 2 பேரும் வீட்டு சுவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்' என்றனர்.
இந்த நிலையில் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.