செங்கல் சூளை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
விராலிமலை அருகே செங்கல் சூளை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொலை மிரட்டல்
விராலிமலை அருகே உள்ள மேப்பூதகுடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 33). இவர் விராலிமலை அருகே உள்ள ராஜகிரியில் செங்கல்சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 28-ந் தேதி கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் அருள்பிரகாஷ் என்பவருடன் தனது செங்கல் சூளைக்கு சென்றுவிட்டு மீண்டும் விராலிமலை திரும்பி வந்துள்ளார்.
விராலிமலை-இலுப்பூர் செல்லும் சாலையில் பகவான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த விராலிமலை மணமேட்டுப்பட்டியை சேர்ந்த சிவஞானம் உள்ளிட்ட 5 பேர் கோபாலகிருஷ்ணனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் செங்கல் சூளை உரிமையாளரை தாக்கியதாக சிவஞானம், பாக்கியராஜ், சின்னபழனிபட்டியை சேர்ந்த ரகுபதி (29), நிஷாந்த் (21), தனசேகர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரகுபதி, நிஷாந்தை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.