அண்ணன்-தங்கையை தாக்கிய 2 பேர் கைது
அண்ணன்-தங்கையை தாக்கிய 2 பேர் கைது
வடமதுரை அருகே உள்ள பிலாத்து கம்பளியம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதி அதே பகுதியில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பாலமுருகன் சென்றார். அப்போது வாலிசெட்டிப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ் (19) என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது பாலமுருகனுக்கும், சூர்யபிரகாஷ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர்.
இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி பாலமுருகன் அதே பகுதியில் உள்ள தனது தங்கை கீர்த்திகா வீட்டுக்கு சென்றார். அப்போது நண்பர்களுடன் அங்கு வந்த சூர்யபிரகாஷ், பாலமுருகனிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் பாலமுருகனை உருட்டுக்கட்டையால் சூர்யபிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் தாக்கினர். மேலும் தடுக்க வந்த கீர்த்திகாவை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாஷ், அவருடைய நண்பர் சுதாகர் (21) ஆகியோரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகிறார்.