தொழிலாளர்களை தாக்கி செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது
தொழிலாளர்களை தாக்கி செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் சின்னஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 39). தாந்தோணி மலை தென்றல்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர்கள் இருவரும் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் 2 பேரும், கரூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முத்துராஜாபுரத்தை சேர்ந்த வெள்ளையன் (28), ரஞ்சித் (22) ஆகியோர் சேர்ந்து மோகன், மணிகண்டன் ஆகியோரை கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.500-ஐ பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த மோகன், மணிகண்டன் ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிந்து, வெள்ளையன், ரஞ்சித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.