பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
திருமருகலில் வீட்டு வாசலில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
திருமருகலில் வீட்டு வாசலில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைக்குழந்தையுடன்...
நாகை மாவட்டம் திருமருகல் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராகினி (வயது 26). அதேபோல் திருமருகல் ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (34). கூலித் தொழிலாளி.
சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான சேகல் வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கீர்த்திவாசன் (32), சியாத்தமங்கை பகுதியை சேர்ந்த சித்தார்த்தன் மகன் கலையரசன்(25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
அப்போது ராகினி தனது குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ், ராகினியிடம் டியூசன் எடுக்கிறீர்களா என கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு ராகினி நான் டியூசன் எதுவும் எடுக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. அதையடுத்து ராகினியின் தலை முடியை பிடித்து கீழே இழுத்து தள்ளி பலமாக தாக்கி கொலை மிரட்டல் விட்டு, சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இது குறித்து ராகினி திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான கீர்த்திவாசன், கலையரசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ் மற்றும் கீர்த்திவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கலையரசனை போலீசார் தேடி வருகின்றனர்.