ஜோதிடரை தாக்கிய 2 பேர் கைது
தா.பழூர் அருகே சொத்து தகராறில் ஜோதிடரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 44). ஜோதிடரான இவர் ஜெயங்கொண்டம் நகரில் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது அண்ணன் உலகநிதி (58) மற்றும் அக்காள் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நாயகனைபிரியாள் கிராமத்தில் வசிக்கும் தனது தாயார் பழனியம்மாளை பார்ப்பதற்காக ராமதாஸ் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அவரது அக்காள் மகன் கலையரசன் (26), ராமதாசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
2 பேர் கைது
இதில் ஆத்திரம் அடைந்த ராமதாஸ் தகாத வார்த்தைகளால் திட்டி கலையரசனை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் கலையரசன், உலகநிதி, அவரது மகன் அரவிந்த் (20) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி ராமதாசை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ராமதாஸ், கலையரசன் ஆகியோர் தனித்தனியாக தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பின்னர் ராமதாசை தாக்கிய உலகநிதி மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.