மாங்காய் வியாபாரியை கொன்ற 2 போ் கைது
நெய்வேலி அருகே மாங்காய் வியாபாரியை கொன்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள கீழ் வடக்குத்து வடக்கு தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 50). மாங்காய் வியாபாரியான இவர், கடந்த 23-ந் தேதி மாலை வடக்குத்து கிராமத்தில் இருந்து கீழூர் செல்லும் சாலையோர வயலில் உள்ள மோட்டார் கொட்டகை அருகே பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமகிருஷ்ணனின் மகன் ஆதி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எச்சில் துப்பிய விவகாரத்தில் வடக்குத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் மகாராஜன்(40), சிகாமணி மகன் வேலவன்(23) ஆகிய 2 பேரும் கட்டையால் அடித்து ராமகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகாராஜன், வேலவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.