நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது


புஞ்சைபுளியம்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குரும்பபாளையம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 20 நாட்டு வெடிகுண்டுகளும், வெடி மருந்தும், ½ கிலோ அலுமினிய பவுடரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 55) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு் வெடிகுண்டு தயாரிக்க அவருக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டுக்கடையை சேர்ந்த செல்லக்கிளி (51) என்பவர் வெடி மருந்து, அலுமினிய பவுடர் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வேலுசாமியிடம் இருந்து 20 வெடிகுண்டுகள், வெடி மருந்து,, ½ கிலோ அலுமினிய பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு் வெடிகுண்டு தயாரித்ததாக வேலுச்சாமியையும், செல்லக்கிளியையும் கைது செய்தனர்.


Next Story