ரெயிலில் மது பாக்கெட்டுகளை கடத்திய 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயிலில் மது பாக்கெட்டுகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரெயில் 3-வது நடைமேடை வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுனில்குமார் (வயது 25) மற்றும் சம்பத் மகன் சேட்டு (24) என தெரிய வந்தது.
இருவரும் பெங்களூரு பகுதியில் இருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 96 மதுபானப் பாக்கெட்டுகளை கடத்தி வந்ததாக கூறினர். இதையடுத்து 2 பேரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 96 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.