ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
சூரமங்கலம்:-
சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயிலில் கஞ்சா கடத்தல்
வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ெரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி கஞ்சா கடத்தும் மர்ம நபர்களை பிடிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்தி வரும் கும்பல் பெங்களுருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
தனிப்படை போலீசார் விசாரணையில், பிடிபட்ட 2 பேரும் பெங்களூரு லக்கேரி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பகுதியை சேர்ந்த பசுவராஜ் (வயது34), பெங்களூரு ஜெயா நகர் கே.எம்.காலனியை சேர்ந்த இஜாஸ் பாஷா (42) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்து விற்பதாக கூறினர்.
மேலும் ஒடிசா மாநிலம் பெலாங்கீர் பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.5 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 10 கிராம் பொட்டலங்களாக கட்டி அந்த பொட்டலங்களை ரூ.200 வீதம் பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ரெயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.