ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 12½ பவுன் நகை திருடிய 2 பேர் கைது


மதுரையில் ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 12½ பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரையில் ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 12½ பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூதாட்டி உள்பட 3 பேர்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், பரவை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். கடந்த வாரம் சித்திரை திருவிழாவிற்காக ஊரில் இருந்து அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் மதுரைக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திருவிழா முடிந்து ஊருக்கு செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பஸ் ஏறினார்கள்.

அந்த பஸ் விரகனூர் பகுதியில் சென்றபோது, 2 ஆண்கள், மூதாட்டி ஆகியோர் ஏறினார்கள். அதில் மூதாட்டி, தூத்துக்குடியை சேர்ந்தவரின் மனைவி அருகே அமர்ந்துள்ளார். மற்ற 2 ஆண்களும் அருகே நின்று கொண்டிருந்தனர். பஸ் மண்டேலா நகர் பகுதியில் சென்றபோது அவர்கள் 3 பேரும் கண்டக்டரிடம் தகராறு செய்து பஸ்சை நிறுத்தி கீழே இறங்கி விட்டனர்.

ஓடும் பஸ்சில் திருட்டு

அதன்பின்னர், தூத்துக்குடியை சேர்ந்தவரின் மனைவி தனது பையை பார்த்தபோது, அதில் 12½ பவுன் நகை மாயமானது தெரியவந்தது. அந்த மூதாட்டியும், அவருடன் வந்த 2 பேரும் தான் நகையை திருடிவிட்டு பிறகு பஸ்சில் இருந்து இறங்கியது தெரியவந்தது. உடனே, பாதிவழியில் பஸ்சை நிறுத்தி இறங்கி அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவங்களை தெரிவித்து புகார் அளித்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நகை பறித்த கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் செல்வக்குமார் தலைமையில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் ஜெயபாண்டியன், சக்திவேல், கனி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மூதாட்டி உள்பட 3 பேரும் பஸ்சில் இருந்து இறங்கிய இடத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

2 பேர் கைது

அதில் பஸ்சில் இருந்து இறங்கி சென்ற 3 பேர் யார்? என்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் அழகர்கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 48), அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த பாண்டித்துரை (42) மற்றும் லட்சுமி (60) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று முருகேசன், பாண்டித்துரையை கைது செய்தனர். லட்சுமியை தேடி வருகிறார்கள்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் விமலா கூறும் போது, "பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி லட்சுமி உள்பட மேற்கண்ட 3 பேரும் நகையை திருடி உள்ளனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அவர்கள் 3 பேரும் பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது. உடனே விரைந்து சென்று அவர்கள் 2 பேரை கைது செய்தோம். தலைமறைவாக உள்ள லட்சுமியை தேடி வருகிறோம். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் 10-க்கும் மேற்பட்ட நகை திருட்டு வழக்குகள் உள்ளன" என்றார்.

ஓடும் பஸ்சில் நகை திருடிய சம்பவத்தில் 2 பேரை கைது செய்து, நகையை மீட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.


Related Tags :
Next Story