கட்டுமான பொருட்களை திருடிய 2 பேர் கைது
நெடுஞ்சாலை பணிக்காக வைத்திருந்த கட்டுமான பொருட்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலக்கம்பை,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி முதல் சேலாஸ், காந்திபேட்டை வழியாக ஊட்டி செல்ல ரூ.62 கோடி செலவில் மாற்றுப்பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. சிறு பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது. அங்கு வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பொருட்கள் பலமுறை திருடு போனது. இதுகுறித்து குன்னூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் தனபால், கட்டுமான பணிக்காக சாலையோரம் வைத்திருந்த இரும்பு கம்பிகள் திருட்டு போனதாக கொலக்கம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சின்ன கரும்பாலத்தை சேர்ந்த டிரைவர் தியாகராஜ் (வயது 42), பெரிய கரும்பாலத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் (59) ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கரும்பாலம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.