தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
திண்டிவனத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்:
திண்டிவனம் மகாத்மா காந்திநகரை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 41). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் மட்டும் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தென்காசி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் தென்காசியை சேர்ந்த சுரேஷ்(34), தூத்துக்குடியை சேர்ந்த சிவலிங்கம்(38) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக 2 பேரும் திண்டிவனம் பாலமுருகன் வீட்டில் திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த வகையில் திண்டிவனம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.