மேச்சேரி அருகே கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் சிக்கினர்


மேச்சேரி அருகே  கோவில் உண்டியலை திருடிய 2 பேர் கைது  கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் சிக்கினர்
x

மேச்சேரி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து திருடிச்செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் சிக்கி உள்ளனர்.

சேலம்

மேச்சேரி,

கோவிலில் திருட்டு முயற்சி

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஓமலூர் மெயின் ரோட்டில் 5-வது மைல் பஸ் நிறுத்தம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வசித்து வருபவர் செல்வ சக்தி (வயது 41). மளிகை கடைக்காரரான இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் கடையை திறக்க வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

கோவிலின் முன்பு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பதிவு எண் இல்லாமல் நின்றதை கண்டு அவர் அங்கு வந்தார். அப்போது கோவிலுக்குள் இருந்து 2 வாலிபர்கள் உண்டியலை தூக்கிக்ெகாண்டு ெவளியே வந்ததை பார்த்தார்.

உடனே அவர் திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை எடுக்காமல் உண்டியலுடன் அருகில் உள்ள விவசாய காட்டுப்பகுதிக்குள் இருட்டில் தப்பி ஓடிவிட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இதனிடையே செல்வ சக்தியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் மேச்சேரி போலீசாருக்கும் கோவில் உண்டியல் திருட்டு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

அதில் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோவில் இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை பெயர்த்து தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்து தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் அந்த நபர்கள் யார் என்று பரபரப்பாக பேசிக்கொண்டு கோவில் முன்பு திரண்டு நின்றனர்.

இதனிடையே காலை 8 மணியளவில் கோவில் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் கூட்டத்துக்குள் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் இருக்கும் மர்ம நபர்கள் 2 பேர் நிற்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த பொதுமக்கள் அங்கு விசாரணையில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து அந்த வாலிபர்கள் 2 பேரிடமும் போலீசார் சோதனை நடத்தியதில் மோட்டார் சைக்கிள் சாவி கிடைத்தது. அந்த சாவி, அதிகாலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு பொருந்தியது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோவில் உண்டியலை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் கோவிலில் இருந்து திருடிச்சென்ற உண்டியலை அருகில் உள்ள விவசாய நிலத்தில் போட்டு விட்டு சென்றதாக கூறினர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உண்டியலை மீட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள் சேலம் உடையாப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23), அதே பகுதியை சேர்ந்த தீபக் (23) என்பது தெரியவந்தது.

இவர்களில் ஸ்டீபன் ராஜ் லாரி டிரைவராகவும், தீபக் சுமை தூக்கும் தொழிலாளியாகவும் வேலைபார்த்து வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

கோவில் உண்டியலை பெயர்த்து திருடிச்சென்ற 2 பேர் பிடிபட்ட சம்பவம் மேச்சேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story