சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது


சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது
x

கும்பகோணம் அருகே சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற 2 பேரை வியாபாரிகள் போல சென்று போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலை கோணக்கரையில் உலோகத்தால் ஆன 2 சாமி சிலைகளை 2 பேர் விற்க முயற்சிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு நின்று கண்காணித்தனர். அப்போது சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேரிடம் வியாபாரிகள் போல அணுகி, சிலைகளை நாங்கள் நல்ல விலைக்கு வாங்கிக்கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.

2 பேர் கைது

அவர்கள் போலீசார் என்பதை அறியாத அவா்கள் இருவரும் தாங்கள் பதுக்கி வைத்திருந்த 1 அடி உயரமுள்ள சரஸ்வதி சிலை, ¾ அடி உயரமுள்ள லட்சுமிதேவி ஆகிய 2 உலோகத்தால் ஆன சிலைகளை காண்பித்து பணம் பெற முயன்றனர். அப்போது அவா்கள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னா் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவா்கள் சுவாமிமலை அருகே உள்ள அலவந்திபுரத்தை சேர்ந்த ரஞ்சித்(வயது 22), கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த உதயகுமார்(40) என்பதும், அவர்கள் அந்த சிலைகளை கோவிலில் இருந்து திருடி விற்க முயன்றதும் தெரிய வந்தது. அவா்கள் 2 போ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் விற்க முயன்ற 2 சிலைகளும் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த சிலைகள் எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டது?. இந்த சம்பவத்தில் இவர்கள் இருவர் தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினா். அவா்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனா். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.



Next Story