திருச்செந்தூரில் பரபரப்பு: ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு; 2 பேர் தற்கொலை முயற்சி தீயணைப்பு படையினர் மீட்டனர்
திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர். தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர். தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர்.
ஆக்கிரமிப்பு
திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் ஓடையானது தோப்பூரில் தொடங்கி காமராஜர் சாலை, ஜீவா நகர் வழியாக கடலில் கலக்கிறது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் வெயிலுகந்தம்மன் கோவில் தெருவில் நீர்நிலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததாக, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், ஆனந்தமூர்த்தி, வேலாயுதம், மணிகண்டன் உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்குள்ள 3 வீடுகளில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
தற்கொலைக்கு முயற்சி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணன், தம்பிகளான ராஜீ, ரத்தினம் ஆகியோர் வீட்டை பூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
அவர்களை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
2 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.